மன்னரும் படைத்தளபதியாரும் எந்தப் பயணத்தின்போதும் இதுவரை பிரிந்து சென்றதே இல்லை. மன்னவருக்கு முன்னால் கம்பீரமாக வெண்குதிரையில் படைத் தளபதியார் செல்வார். இன்று மன்னரின் இறுதிப் பயணத்தில் நெடுமிடல் செல்லவில்லையே என அனைத்துக் குருமார்களும் நினைத்து வருத்தப்பட்டனர். இதேபோல் பாண்டியர் மாளிகை வாசலின்முன்பு கட்டப்பட்டிருந்த நெடுமிடலின் வெண்குதிரையானது, மக்கள் நீண்ட வரிசையாகத் தீவெட்டிகளுடன் சென்ற பயணத்தைப் பார்த்து, நெடுமிடல் இன்னும்தன்மீது அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து பயணிக்க வரவில்லையே என்பதை உணர்ந்ததுபோல், தன் இரு கால்களையும் தூக்கித் தூக்கி எக்காளமிட்டு நிலைகொள்ளாமல் கனைக்கத் தொடங்கியது. எவ்வளவோ தூரங்கள் தன்மீது பயணித்த தலைவன் இன்னும் வரவில்லையே என்பதை உணர்த்தும்வண்ணம் சுற்றும் முற்றும் தன் தலையை அசைத்துத் தேடியது. இதைக்கண்ட இரண்டு சீராள குருமார்கள், தாங்கள் அமர்ந்திருந்த குதிரைகளுடன் அதன் அருகே சென்று, அதன் இருமருங்கும் அக்குதிரைகளைக் கட்டிவைத்து, நாங்கள் இங்குதான் இருக்கின்றோம் என்பதை உணர்த்தி, அதனை அமைதிப்படுத்தினர்.
அவர்கள் இருவரும் பாண்டியன் மாளிகைக்குள் சென்று, அங்கே இழுத்துவரப்பட்ட குறுமனிதனின் முகத்தைத் தீவெட்டிகளின் வெளிச்சத்தில் உற்று நோக்கினர். அவன் சாவகத் தீவுகளில் வாழும் பழங்குடியினர் போன்று இருந்தான். இவனை இங்கேயே வைத்திருங்கள். இவனைத்தேடி யார் வந்தாலும் அவனையும் உடனே கைது செய்துவிடுங்கள். இவன் மிகவும் ஆபத்தானவன். இவன் இனத்தவர்கள் கானகத்தில் மரம்விட்டு மரம் தாவித் தப்பித்துச் செல்லும் ஆற்றலுடையவர்கள். இவனது உடைமைகளை இவனிடமிருந்து அப்புறப்படுத்தி, இவனது ஆடைகளையும் அகற்றிவிட்டு கை- கால்களுக்கு விலங்கிடுங்கள். அதன்பின்னரே இவனது உடைமைகளை ஆய்வு செய்யவேண்டும். இவன் உருண்டுவந்து தாக்கும் பயிற்சியும், கழுத்தைப் பற்களால் கடித்தே எதிரிகளைக் கொல்லும் இயல்புடையவன். இவனுக்கு அருகே யாரும் சென்றுவிடாதீர்கள். இவனைத் தேடிவருபவர்களும் ஆபத்தானவர்கள். எனவே இம்மாளிகையின் தலைவாசலில் கடுங்காவலில் இருங்கள். நாங்கள் சில முக்கியப் பணிகளை முடித்துவிட்டு வருகிறோம்' என வீரர்களிடம் கூறிவிட்டு, மாளிகையைவிட்டு விரைந்து சென்றனர்.
நெடுமிடல் எரிந்து கிடந்த மேடைக்கருகே இருந்த தலைமைச் சீராள குருவானவர்தான், மதுரையிலிருந்து அழைத்து வந்திருந்த வீரர்களுக்கு ஒரு கட்டளையிட்டார். "இந்நகரைச் சுற்றிலும் புறப்பகுதியில் வட்டவடிவில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்து, இந்நகரிலிருந்து எந்த ஒருவரும் தப்பிச்செல்ல இயலாதவாறு காவல் கோட்டத்தை உருவாக்குங்கள். அக்கோட்டத்தில் முன்பக்கம் காலாட்படையும், அதன்பின் குதிரைப்படையும், மூன்றாம் வட்டம் யானைப்படையும் உடனே அமையுங்கள். காலாட்படையிலிருந்து தப்பித்தால் விரைந்து குதிரையில் சென்று அவர்களைப் பிடித்துவர ஆயத்தமாக குதிரைப்படை வீரர்கள் இருக்கவேண்டும். யானைப்படைகளில் விற்படையுடைய வீரர்கள், ஒரு யானையின் முன்னும் பின்னும் பார்த்தவாறு இருவர் அமர்ந்து காவற்கோட்டத் திலிருந்து வெளியே தப்ப முயல்பவர் களையும், வெளியிலிருந்து உள்ளே நுழைய முயல்பவர்களையும் உடனுக்குடனே கொன்றுவிடுங்கள்' என உத்தரவிட்டார்.
அவரது உத்தாவு கேட்ட மறுகணமே வீரர்கள் அவர் சொன்ன காவற் கோட்டைத்தை உருவாக்கினர். இங்கு காவற்கோட்டம் என்பது மேற்சொன்ன முப்படைகளும் வட்ட வடிவமாக ஓரிடத்தைச் சூழ்ந்துநின்று காவற்பணி செய்வதைக் குறிக்கும். இதனைத் தொடர்ந்து அவர் அந்நகர மக்களிடம் உரத்த குரலில் "இந்நகரில் வாழும் அனைவரும்உங்களுடைய மனைகளுக்குள் விரைந்துசென்று கதவைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். அவ்வாறு செல்லும்போது உங்களுக்கு இனம்தெரியாத புதியவர்கள் யாரை யும் மனைக்குள் அனுமதிக்காதீர்கள். நாங்கள் அழைக்கும்வரை வீட்டை விட்டு வெளியே வந்துவிடாதீர்கள்' என கேட்டுக்கொண்டார்.
காலாட்படையினர், வேல்கம்புகளையும், குதிரைப் படையினர் நீண்ட உடை வாட்களையும், யானைப் படையினர் விற்களில் பூட்டப்பட்ட அம்புகளையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஏதோ ஒரு நிகழக்கூடாத சம்பவம் நிகழப் போகிறது என்பதை உணர்ந்த அந்நகர மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களுக்குள் ஓடிப் புகுந்து கதவுகளைத் தாழிடத் தொடங்கினர். அந்நேரத்தில் சீராள குருமார்கள், ஏதேனும் அந்நியர்கள் நடமாட்டம் இருக்கின்றனவா என அறிய தங்களது குதிரைகளில் ஏறி, தீவெட்டிகளைக் கையிலேந்தி அந்நகரத் தெருக்களில் உலாவர ஆரம்பித்தனர்.
அப்போது தலைமைச் சீராள குருவானவர் காவற்கோட்டத்தினரை நோக்கி, "நீங்கள் அனைவரும் என்னை நோக்கி காவற்கோட்டத்தை சுருக்கத் தொடங்குங்கள்..' என உரத்தகுரலில் கட்டளையிட்டார். முப்படையினரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி காவற்கோட்டத்தை சுருக்கத் தொடங்கினர்.
அப்போது நெடுமிடல் எரிந்த மேடைக்கு முன் சில பேய் மகளிரும், சில பாணர்களும், சில ஆண்களும் அங்குமிங்கும் மிரண்டு ஓடத் தொடங்கினர். அப்போது தலைமைக் குரு, "சீராள குருமார்களே இவர்களைத் தப்பவிடக்கூடாது. சுற்றி வளையுங்கள்' என உத்தரவிட்டார். சீராள குருமார்கள், தங்கள் கூரிய உடைவாளுடன் அவர்களை ஒன்றுசேர்த்து யாரும் தப்ப இயலாத அளவிற்கு, குதிரைகளின் மீது அமர்ந்தவாறே வட்ட வடிவில் தங்கள் காவற்சிறைக்குள் அவர்களைக் கொண்டுவந்தார்கள்.
அப்போது தலைமைக் குரு "என் மெய்க்காப்பாளர்களே! நாம் கொண்டுவந்த எரிநீர் கலயங்களைக் கொண்டுவாருங்கள். இவர்களது பாதங்களில் எரிநீரை ஊற்றுங்கள்' எனக் கட்டளையிட்டார். இங்கு எரிநீர் என்பது, தமிழ் மருத்துவ முறையின்படி தயாரிக்கப்பட்ட கந்தக அமிலமாகும். இதனைக் கந்தக ஜெயநீர் என்றும் அக்னித் திராவகம் என்றும் பின்னாளில் அழைத்தனர். கலயங்களின் இரண்டு பக்கவாட்டில் இரண்டு மூங்கில் கம்புகள் கட்டப்பட்டு, ஒரு கலயத்திற்கு இருவர்வீதம் பத்து கலயங்கள் கொண்டுவரப்பட்டன. பிடிபட்ட பகைவர்கள் தப்பித்து ஓடாதிருக்க, இத்திரவகத்தை பாதங்களில் ஊற்றிவிடுவார்கள். அவ்வாறு ஊற்றும்போது பகைவர்களின் கால் பாதங்கள் பொத்துவிடும். அவர்களால் அடியெடுத்துவைத்து ஓட இயலாது.
இவர்களைச் சுற்றிலும் காலாட்படையினர், தங்கள் கூரிய வேல் முனையை அவர்களின் கழுத்துகளுக்கு நேர்வைத்து, அவர்கள் எங்கும் அசையாதவாறு அவர்களை நிலை நிறுத்தினர். அப்போது தலைமைச் சீராளகுரு அவர்களை நோக்கி உரத்த குரலில் "நீங்கள் யார் என்பதை மறைக் காமல் கூறிவிடுங்கள். இல்லையேல் உங்கள் கால்களில் எரிநீர் ஊற்றப்படும். அதன்பின் நீங்கள் ஒரு அடிகூட எடுத்துவைக்க இயலாது' எனச் சினங்கொண்டு எச்சரித்தார்.
சீராளர் கூறியதைக்கேட்ட ஒரு பேய்மகள் "எங்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள். நாங்கள் சோழநாட்டு ஆடல் மகளிர். வேளிர் மன்னன் எவ்விக்கு உதவும்வகையில் ஒற்றர்களாக நாங்கள் இருவரும் இங்கு வந்தோம்' எனக் கூறி மற்றொரு பெண்ணையும் அடையாளம் காட்டினாள். இதைக்கேட்ட சீராளார் "நீ உண்மையான பேயாக மாறப் போகிறாய். இவர்கள் வேடமிடுவதற்கு உதவும் கூந்தலை அறுத்துவிடுங்கள்' என வீரர்களுக்கு கட்டளை யிட்டார். உடனடியாக அவர்களது கூந்தல் இரண்டு வீரர்களால் அறுத்தெரியப்பட்டது. சீராளர் "இவர்கள் இருவரையும் அப்புறப்படுத்தி பாண்டியர் மாளிகைச் சிறையில் அடையுங்கள்' என்று கட்டளையிட்டார். இருவரும் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டனர்.
மீதமிருந்தவர்களில் ஒரு யாழ்ப்பாணன் "நான் கொல்லிமலையிலிருந்து இங்கு எவ்வியின் ஆட்களால் அழைத்துவரப்பட்டேன். கொல்லிமலையில் போர் வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைகளை சோழ மன்னர் அமைத்திருக்கின்றார். பலவகையான பயிற்சிகள் அங்கே கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் பயிற்சிபெறும் வீரர்களைக்கொண்டு பாண்டிய மன்னரை எவ்வி வீழ்த்தியவுடன், இத்துறைமுக நகரை சோழப் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, இம்மருங்கூர் துறைமுகப்பட்டினத்தின் செல்வச் செழிப்பை சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு உரியதாக மாற்ற வேண்டும் என்பதே எவ்வியின் திட்டம்.
இதற்கான போர் தொடுக்கும் சூழலை அறிந்து சோழ மன்னருக்கு அறிவிப்பதே எங்கள் நோக்கம்' என அந்த யாழ்ப்பாணன் கூறிக்கொண்டிருக்கும்போது, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவனது கண்கள் கோபத்தில் சிவந்தன. அவன் விழிகள் அந்த யாழ்ப்பாணனை முறைத்தன.
அதைக் கண்ணுற்ற யாழ்ப்பாணன் "சீராளரே! என்னை காப்பாற்றுங்கள். இவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள். இங்கிருந்து என்னை வேறு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லுங்கள்' என இருகைகளையும் கூப்பி சீராளரை வணங்கினான். அதைக்கேட்ட சீராளர் "கவலைப்படாதே.. யாரும் உன்னை நெருங்காத அளவிற்கு மிகுந்த பாதுகாப்புடன் உன்னை வைத்துக்கொள்வோம். இவர்கள் யாரென்று உனக்குத் தெரியுமா?' என வினவினார். அதற்கு யாழ்ப்பாணன் தெரியும். இவர்கள் சோழநாட்டு கப்பற்படையில் பணிபுரிபவர்கள். கடலில் நீண்ட தூரம் நீந்தும் வல்லமை படைத்தவர்கள். கப்பற்கலன்களில் நடத்தும் போர் உத்திகளைக் கையாள்வதில் திறன்படைத்தவர்கள். பாய்மரங்களில் ஏறி எடைமிகுந்த பாய்களை, வீசும் காற்றை எதிர்த்துக்கட்டும் வலிமை படைத்தவர்கள். இவர்கள் கொல்லிமலையில் சோழவீரர்களுக்கு கடற்போர் புரியும் உத்திகளைக் கற்றுக்கொடுக்க வந்தவர்கள். எவ்வியின் அழைப்பின் பேரில் இத்துறைமுகத்தை சீரழித்து, பாண்டியர் வாணிபத்தைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளனர். இங்குள்ள பரதவர் சேரிகளைத் தீக்கிரையாக்கி, இங்கிருக்கும் இரண்டு கலங்கரை விளக்கங்களை அழித்தொழிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஐம்பதிற்கு மேற்பட்டவர்கள் இத்துறைமுகத்தில் ஒரு கப்பற்கலனில் காத்திருக்கின்றனர்.
மேலும் ஒரு கப்பற்கலனில் தீயூட்டுவதற்கான திரவம் நிறைக்கப்பட்ட இரும்புக்கலங்களை வைத்துள்ளனர். அவை கரும்புச் சாற்றிலிருந்தும் பெருந்தும்பைச் சாற்றிலிருந்தும் இறக்கப்பட்ட வடிநீர் திரவமாகும். இவற்றை ஊற்றி அதன்மீது நெருப்பு வைத்தால் அதனை நீர் ஊற்றியோ, காற்றினாலோ அணைக்க இயலாது. இத்திரவத்தைப் பாண்டிய மன்னர்மீது ஊற்ற வருவதைப் பார்த்த நெடுமிடல், மன்னர்மீது ஒரு துளி திரவம்கூட பட்டுவிடக்கூடாது எனத் தன் பரந்த உடலால் அவ்வளவு திரவத்தையும் தன்மீது தாங்கிக்கொண்டார்' என அவன் கூறிக்கொண்டிருக்கும்போதே சீராளகுருவின் கண்கள் சினத்தால் சிவந்தன. "இதையும் தாண்டி மன்னரைக் கொன்றது யார்?' எனக் கர்ஜித்தார். அதற்கு "எவ்வி' என்ற பதில் அவனது உதடுகள் நடுநடுங்க அச்சத்துடன் வெளிவந்தது.
"எவ்வி எங்கே இருந்தான்?' என அதட்டினார் சீராளர். உடனே யாழ்ப்பாணன் "இவர்கள் அனைவரும் விழாவிற்குப் பதினைந்து தினங்களுக்குமுன்பே இங்கு வந்துவிட்டனர். இவ்வூரில் விழாப் பந்தலுக்கான தென்னங்கீற்று வேய்பவனிடம் பொற்கிழிகளைக் கொடுத்து, முத்துப்பந்தல்மீது எவ்வி அமர்வதற்கான இருக்கை அமைத்து, அது வெளியே தெரியாமலிருக்க அலங்காரச் சாளரங்களை முத்துப்பந்தலின் மேலே மன்னவன் அமரும் அரியாசனத்திற்கு இருபுறமும் அமைக்கவைத்தனர். மன்னருக்கு இடப்புறம் எவ்வியும். வலப்புறம் நன்றாக முடக்கு வர்மம் தெரிந்த எவ்விக்கு நம்பிக்கையான வீரனையும் அமரவைத்திருந்தனர். இவனுடைய அறிவுரையின்படி, அரவத்தின் நச்சு தடவிய குறுவாளுடன் காத்திருந்தனர். மூன்று வழிகளில் ஏதாவது ஒன்றின்மூலம் மன்னனையும், இளவலையும் கொலை செய்துவிடத் தயார்நிலையில் இருந்தனர். இவர்கள் திட்ட மிட்டபடி முந்நீர்ப் பெருவிழா தொகை நடனம் நடக்கின்றபோது, இவர்கள் அழைத்துவந்த ஒரு ஆடல் மகளிர், ஒரு பெரிய மலர் மாலையை மன்னவனுக்கு அணிவிப்பாள்.
அதுவே பாண்டிய மன்னரை முப்புறமிருந்தும் தாக்கும் தருணமாக இருக்கவேண்டுமென்று திட்டமிட்டிருந்தனர். அதன்படியே இன்று நடந்தேறிவிட்டது. இவ்விழாவைப் பார்த்தபின்புதான் பாண்டிய மன்னரின் உயர் பண்பையும் மக்களிடம் அவர் காட்டிய அன்பையும் கண்டு வியந்தேன். என் மனம் மாறுவதைப் பார்த்துவிட்டு, இவர்கள் என்னைத் தங்களைவிட்டுப் பிரியாதவாறு என்னை அச்சுறுத்திக்கொண்டே உடன் வைத்துக்கொண்டனர். இனி என் மனதார ஒரு தீங்கும் பாண்டிய நாட்டிற்குச் செய்யமாட்டேன்' எனக் கூறிக்கொண்டிருந்தபோதே, சீராளர் உரத்த குரலில் "மீதமுள்ள அத்தனைபேரையும் சங்கிலியால் பினையுங்கள். அவர்களது இடைக்கு மேலேயும் கீழேயும் உள்ள ஆடைகளை அகற்றி, அவர்களது உடலில் முத்திரைகள் ஏதேனும் பச்சை குத்தியுள்ளனவா எனப் பரிசோதிங்கள்' என்றார்.
அதன்படி, அவர்கள் கழுத்திலிருந்த ஈட்டி களை அசைக்காமல் பாண்டி வீரர்கள் அழுத்திக் கொண்டிருக்கையில், அவர்களது ஆடைகளில் இடைமறைப்பை மட்டும் விட்டுவிட்டு அனைத்தும் அகற்றப்பட்டன. அப்போது சீராள தலைமைக் குரு "அவர்களது பாதங்களில் எரிநீரை ஊற்றுங்கள்' எனக்கட்டளையிட்டார். வீரர்கள் அவர்களை இரும்புச் சங்கிலியால் பிணைத்து அவர்களின் பாதங்களில் எரிநீரை ஊற்றினர். அவர்கள் அனைவரும் துடிதுடித்தனர். "இழுத்துச் செல்லுங்கள் இவர்களையும்... நெடுமிடல் இறந்த இடத்திற்கு...' எனத் தலைமைச் சீராளர் கொதித்தெழுந்த கோபத்துடன் கர்ஜித்தார்.
இழுத்துச் செல்லப்பட்டவர்கள் அடைந்த தண்டனை..? வரும் இதழில்...
தொடர்புக்கு 9944564856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்